

அதி தீவிர புயலாக மாறும் நிவர் இன்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும். அப்போது 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மணிக்கு 6 கி,மீ வேகத்தில் புயல் நகர்வதாகவும், வட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நிவர் புயல் தற்போது தீவிரப் புயலாக (severe cyclonic storm) வலுப்பெற்றுள்ளது. இது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 300 கி.மீ. கடலூருக்கு தென் கிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது கடந்த 6 மணி நேரத்தில் அது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 105 முதல் 115 கி.மீ வேகத்தில் உள்ளது.
இன்று மதியம் இது அதி தீவிரப் புயலாக (very severe cyclonic storm) வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவ.25) இரவு அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
கரையைக் கடக்கும் சமயத்தில் பலத்தக்காற்றானது புதுவை, காரைக்கால், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 130 முதல் 140 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சமயங்களில் 100 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழையும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மற்றும் சென்னையில் புறநகர் பகுதியில் மழை தொடரும். சென்னையில் 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மழை தொடர ஆரம்பிக்கும். இரவு மழை அதிகரிக்கும்''.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.