

ஓசூர் சிப்காட் 1-ல் இயங்கி வரும் அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பில் 100 மினி சரக்கு வாகனங்களுடன் வங்கதேசம் புறப்பட்ட முதல் ஏற்றுமதி சரக்கு ரயிலை வழியனுப்பும் விழா நடைபெற்றது.
ஓசூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவை முன்னிட்டு ஓசூரில் இருந்து வங்கதேசம் புறப்பட்ட சரக்கு ரயிலில் 100 மினி சரக்கு வாகனங்கள் ஏற்றப்பட்டு, ரயில் இஞ்ஜின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சரக்கு ரயிலை தென்மேற்கு ரயில்வே பெங்களூரு மண்டல ரயில்வே மேலாளர் அசோக்குமார் வர்மா மற்றும் ஓசூர் அசோக் லேலாண்ட் நிறுவனத் தலைவர் ராக்கேஷ் மிட்டல் ஆகியோர் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக ஏற்றுமதி சரக்கு ரயிலில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்களை பெங்களூரு மண்டல ரயில்வே அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து பெங்களூரு மண்டல ரயில்வே மேலாளர் அசோக்குமார் வர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்திய ரயில்வே மற்றும் அசோக்லேலாண்ட் நிறுவனம் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி ஓசூரில் அசோக்லேலாண்ட் நிறுவனத்தில் உற்பத்தியான மினி சரக்கு வாகனங்களுடன் தென்மேற்கு ரயில்வேயின் முதல் ஏற்றுமதி ரயில் வங்காளதேசத்துக்குச் செல்கிறது.
சாலைப் போக்குவரத்தை விட ரயிலில் பாதுகாப்பாகவும் துரிதமாகவும் சரக்குகளைக் கொண்டு செல்லமுடியும். 2020-21 ஆம் நிதியாண்டில் ஓசூரில் இருந்து வங்காளதேசம் செல்லும் இந்த சரக்கு ரயிலில் உள்ள 25 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 4 மினி சரக்கு வாகனங்கள் வீதம் மொத்தம் 100 மினி சரக்கு வாகனங்கள் ஏற்றப்பட்டுள்ளன.
இந்த ரயில் ஓசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூரு பானசவாடி ரயில் நிலையம் வழியாக தர்மாவரம், விஜயநகர், ஹவுரா நகர் வழியாக 3 நாட்களில் சுமார் 2,121 கி.மீ. பயணித்து வங்காளதேசத்தில் உள்ள பேனாபோல் நகருக்குச் சென்றடைய உள்ளது. ஏற்கெனவே ஓசூரில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கு 4 முறை சரக்கு ரயில்களில் 5,528 இருசக்கர வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன'' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு முதுநிலை மண்டல வர்த்தக மேலாளர் கிருஷ்ணாரெட்டி, ஓசூர் ரயில் நிலைய மேலாளர் குமரன் மற்றும் ரயில் நிலைய போலீஸார் பங்கேற்றனர்.