

கோவை வனக்கோட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்க சிறப்பு வன எல்லை இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் அவ்வப்போது ஊருக்குள் யானைகள் நுழைவதும், வன எல்லைக்கு அருகே யானை-மனித மோதல் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மனித உயிரிழப்பு மற்றும் பயிர் சேதாரங்களைத் தடுப்பதற்காக கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் அறிவுறுத்தலின்பேரில், ஆல்பா, பீட்டா, காமா என மூன்று சிறப்பு எல்லை இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறியதாவது:
"கோவை வனக் கோட்டத்தில் பணிபுரியும் யானை விரட்டும் காவலர்கள் இந்தக் குழுக்களில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு அல்லது மூன்று துணைக் குழுக்கள் இருக்கும். இந்தத் துணைக் குழுக்கள் தொம்பிலிபாளையம், முள்ளங்காடு, நரசிபுரம், மருதமலை, வரப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வெள்ளியங்காடு, சமயபுரம், மேட்டுப்பாளையம் டிப்போ மற்றும் அம்மன்புதூர் (சிறுமுகை) ஆகிய இடங்களில் இருந்து பணியாற்றுவார்கள்.
ஒவ்வொரு துணை குழுவுக்கும் யானை விரட்டுவதற்காக ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது தினமும் மாலை 4 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரை அந்தந்த பகுதிகளில் வன எல்லைக்கு வெளியே ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள்.
காட்டைவிட்டு யானைகள் வெளியே வந்துள்ள தகவல் அறிந்தவுடன் அந்த பகுதிக்கு உடனடியாக இவர்கள் சென்று யானைகளை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவார்கள். இந்த குழுக்கள் கோவை வனக் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மேற்பார்வையின் கீழ் இயங்கும்.
இந்த சிறப்பு குழுவினர் வனசரகங்களில் உள்ள இதர பணிகளை செய்ய மாட்டார்கள். உயரழுத்த மின்சார வேலி, வேட்டைக்காக வைக்கப்படும் சுருக்குக் கம்பித் தடுப்புப் பணிகள், வனத்தினை விட்டு வெளியே வரும் யானை மற்றும் இதர வன விலங்குகளை மீண்டும் வனத்துக்குள்ளே திருப்பி அனுப்பும் பணிகளை மட்டும் இவர்கள் மேற்கொள்வார்கள்.
இதன் மூலம் தினமும் இரவு பணிபுரியும் யானை விரட்டும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வும் கிடைக்கும். இவர்களுக்கென தனியாக வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன. ஆல்பா குழுவில் 22 பேர், பீட்டா குழுவில் 26 பேர், காமா குழுவில் 23 பேர் என மொத்தம் 71 பேர் இந்த சிறப்புக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்".
இவ்வாறு அவர் கூறினார்.