விராலிமலை சுங்கச்சாவடி பகுதியில் லாரி மீது கார் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுங்கச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே எற்கை வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). மதுரை மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் பிரபு (25). மதுரை அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, மோகன்(58), சிவக்குமார்.
இவர்கள், 5 பேரும் சென்னையில் இருந்து இன்று (நவ. 25) அதிகாலை மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்தக் காரை அய்யனார்புரத்தைச் சேர்ந்த பிரபு ஓட்டிச் சென்றார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் மணிகண்டன், பனையூரைச் சேர்ந்த பிரபு ஆகியோர் படுகாயங்களுடன் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் பிரபு, மோகன், சிவகுமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
