பேரபாயம்; புதுச்சேரி துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: தொடரும் மழை - வீட்டிலிருந்து வெளியே வர தடை

பேரபாயத்தைக் குறிக்கும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
பேரபாயத்தைக் குறிக்கும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
Updated on
1 min read

நிவர் புயலால் புதுச்சேரி துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து தொடர்ந்து மழை பொழிவு உள்ளது. காலை முதல் மழை, காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இது, இன்று (நவ. 25) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதுச்சேரியில் தொடர்ந்து நேற்றிலிருந்து மழை பொழிவு நிலவுகிறது. அத்துடன் கடலில் அலையின் வேகமும் அதிகரித்துள்ளது. காற்று வீசும் அளவும், மழையின் வேகமும் காலை முதல் அதிகரித்துள்ளது.

புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதுச்சேரியில் நாளை (நவ. 26) காலை வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது. குறிப்பாக, கடற்கரை செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தடை உத்தரவால் கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. பாண்லே பால் பூத், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் அனைவரும் பணியில் உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதில் 'பேரபாயம் - மிகக் கடுமையான புயல் துரைமுகப் பகுதியிலோ அல்லது மிக அருகிலோ கரையைக் கடக்கக்கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in