

‘நிவர்’ புயல் தமிழக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
‘நிவர்’ புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, ஜிஎன்டி சாலை, காமராஜர்சாலை, சூளை, எழும்பூர், வேப்பேரி,கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. அப்பகுதிகளில் வாகனங்கள் மிதந்தவாறு, ஊர்ந்து சென்றவண்ணம் உள்ளன.
பொதுமக்கள் அவதி
அதன் காரணமாக சாலைகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துதேங்கியுள்ளது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர்தேங்கி இருப்பதால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கிய சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மாநகர போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை மாநகரம் முழுவதும் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநகராட்சி மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போதுஅவர் கூறியதாவது:
மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்க 109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 1,500 பேருக்கு சமையல் செய்யும் அளவுக்கு தேவையான பொருட்களுடன் 4 பொது சமையல் அறைகள் தயார் நிலையில் உள்ளன.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், மாநகராட்சியின் 15 மண்டலத்துக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், துணை ஆணையர் ஜெ.மேகநாதரெட்டி, தலைமைப் பொறியாளர் (பொது) எல்.நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.