Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கிறது ‘நிவர்’ புயல்; மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள், கப்பல்கள்- தமிழகத்தில் பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இது, இன்று மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் நிலவரம் குறித்து செய்தி யாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு வடைந்து, செவ்வாய்க்கிழமை (நேற்று) அதிகாலை ‘நிவர்’ புயலாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். தற் போதைய நிலவரப்படி புதுச்சேரியில் இருந்து 370 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 420 கி.மீ. தொலைவியிலும் நிலைகொண்டுள்ள புயல், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது, புதன்கிழமை (இன்று) மாலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே அதிதீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடு துறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதி களில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ., அவ்வப் போது 100 கி.மீ. வேகத்தில் சூறா வளிக் காற்று வீசக்கூடும்.

மேலும் திருவண்ணாமலை, புதுச் சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத் தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும். சென்னையில் சில தினங்களுக்கு மழை தொடரும்.

26-ம் தேதியும் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நிவர்’ புயல் இன்று கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங் கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. புதுக் கோட்டை முதல் செங்கல்பட்டு வரை யிலான கடலோர மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்படும் பகுதி களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி களை மேற்கொள்ள தமிழகத்துக்கு 12, புதுச்சேரிக்கு 2, காரைக்காலுக்கு 1 என மொத்தம் 15 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 160 வீரர்கள் உரிய மீட்புக் கருவிகளுடன் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

முதல்வர் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து தலைமைச் செயலகத் தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோ சனை நடத்தினார். பின்னர், சேப்பாக் கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்வர் வந்தார். அவருக்கு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பனீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோர் விளக்கினர். உடன் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இருந்தனர்.

அதன்பின், செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

‘நிவர்’ புயலால் 4,133 பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தனிக்கவனம் செலுத்தவும், மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப் படும் மக்களை தங்க வைக்க 3,344 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 9 முகாம்களில் 254 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளிலேயே பாதுகாப் பாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை விடப்படுகிறது.

அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. அதனால், மக்கள் வீணாக அச்சப்பட வேண்டியதில்லை.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

விமானங்கள், கப்பல்கள்

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற் காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான கடற்படை சார்பில், 5 நிவா ரணக் குழுக்களும், ஒரு மீட்புக் குழு வும் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. இந்தக் குழுக்கள் சென்னை, நாகப்பட்டினம், ராமேசுவரம் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. ஐஎன்எஸ் ஜோதி என்ற கப்ப லும் விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கட லோர காவல்படை சார்பில், 4 ரோந்துக் கப்பல்களும், 2 ஹெலிகாப்டர்களும், 3 டார்னியர் விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, 15 பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. இந்தக் குழுக்கள் மாநில அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடும். குறிப்பாக, கடல் பகுதியில் புயலின்போது சிக்கித் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்கும்.

முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் பழனிசாமியை நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்தில் புயல் பாதிப்பை எதிர்கொள்ளத் தேவைப்படும் அனைத்து விதமான உதவிகள் மற்றும் ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என்று முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்தார்.

அதேபோல, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்த பிரதமர், மக்கள் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x