நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்னி பேருந்து, ரயில்கள் ரத்து; கொட்டிய மழையிலும் கடைசி பேருந்தை பிடிக்க அலைமோதிய மக்கள்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 கடலோர மாவட்டங்களுக்கான அரசுப் பேருந்து சேவை நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று பிற்பகல் விழுப்புரம் புறப்பட்டுச் சென்ற கடைசி பேருந்தை பிடிக்க அலைமோதிய மக்கள்.படங்கள்: பு.க.பிரவீன்
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 கடலோர மாவட்டங்களுக்கான அரசுப் பேருந்து சேவை நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று பிற்பகல் விழுப்புரம் புறப்பட்டுச் சென்ற கடைசி பேருந்தை பிடிக்க அலைமோதிய மக்கள்.படங்கள்: பு.க.பிரவீன்
Updated on
2 min read

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 கடலோர மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் சேவை நேற்று பிற்பகலுடன் நிறுத்தப்பட்டதால், கடைசியாக புறப்பட்டு சென்ற பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆம்னி பேருந்துகள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 24 சிறப்பு ரயில்களின் இன்றைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிவர் புயல் கரையை கடக்கும்போது, கடலோர மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்கள் இடையே அரசு பேருந்துகள் சேவை நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், சென்னை கோயம்பேடு மற்றும் பல்லவன் இல்ல வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற கோட்டங்களில் இருக்கும் போக்குவரத்து பணிமனைகளிலும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளும் அடுத்தஅறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.அன்பழகன் நேற்று அறிவித்துள்ளார். இதனால், 250-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், வேலூர் வழியாக தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன.

7 கடலோர மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் சேவை நேற்று பிற்பகலுடன் நிறுத்தப்பட்டதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கடைசியாக புறப்பட்டு சென்ற பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு ரயில்கள் ரத்து

இதேபோல, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் 24 சிறப்பு ரயில்களின் இன்றைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை, காரைக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி, கொல்லம், திருச்சி செல்லும் ரயில்கள், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும்சிறப்பு ரயில்களின் இன்றையசேவை இரு மார்க்கத்திலும்ரத்து செய்யப்படுகிறது. ரத்துசெய்யப்பட்டுள்ள ரயில்களுக்கான கட்டணத் தொகை முழுமையாக திருப்பித் தரப்படும் என்று தெற்குரயில்வே தெரிவித்துள்ளது.

மின்சார ரயில் சேவை ரத்து

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னையில் நேற்று முழுவதும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. நிவர் புயல் தீவிரமடைந்து வருவதால், சென்னையில் இன்று காலை 10 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து புறநகர் சிறப்பு ரயில் சேவைகளும் ரத்துசெய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மாநகர பேருந்துகள் ஓடும்

சென்னையில் நேற்று காலைமுதல் விட்டுவிட்டு மழை பெய்தபோதிலும், மாநகரப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. மதியத்துக்கு பிறகு பயணிகள் கூட்டம் குறைந்ததால், பேருந்துகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அத்தியாவசிய பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தேவைக்காக சென்னையில் இன்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் தேவைக்கு ஏற்ப, 1,000-க்கும்மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளதாகசென்னை மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில்கள் இயங்கும்

சென்னையில் மெட்ரோ ரயில்கள், விடுமுறை நாள் அட்டவணைப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். புயல் காற்றின் வேகத்தை கணக்கிட்டு, ரயில்களை பாதுகாப்பாக இயக்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in