

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக திமுக தேர்தல் பிரச்சாரம் நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த நவ.20-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவையாறில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியது: நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திமுக தேர்தல் பிரச்சார பயணம் நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. மீண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் நவ.28-ம் தேதி பிரச்சார பயணம் தொடங்கப்படும். நிவர் புயலால் தங்கள் பகுதிகளில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டால் திமுக இளைஞரணியினர் விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை.சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.