

தமிழகத்தில் மத்திய அரசின் பணிகளை நிறைவேற்ற தமிழக அரசிடமிருந்து இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கிழக்கு கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும்.
குளச்சல் துறைமுகம் அமைக்க முதற்கட்ட ஆய்வு நடத்தி முடிக் கப்பட்டு, துறைமுகம் அமைக்க லாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆய்வு முழுமையாக முடிந்த பிறகு அந்தத் திட்டத்துக்கான அங்கீகாரத்தை மத்திய அமைச் சரவை வழங்கும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக எம்.பி.க்களை வருகிற 31-ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்கவுள்ளார்.
கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கு இடையே நல்ல உறவை மேம்படுத்த வேண்டும். அப்போது தான், காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண முடியும். மழை மற்றும் வெள்ளக் காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க காவிரியில் தேவைப்படும் இடங்களில் தமிழக அரசு தடுப் பணைகளை கட்ட வேண்டும். காவிரியில் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும்.
தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தில் மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டி யுள்ளதால் பணிகளில் தேக்கம் மற்றும் காலதாமதம் நிலவுகிறது. குறிப்பாக, காக்கிநாடா- மரக் காணம் இடையே சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு நீர்வழி போக்குவரத்து அமைப்பதற்கான திட்டத்தில் தமிழக பகுதிக்காக ரூ.123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆந்திரத்தைக் காட்டிலும் தமிழகத்தில் வேகம் குறைவாக உள்ளது.
மத்திய அரசின் பணிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசிடமிருந்து இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.