Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

22 அடியை தொட்ட பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்

உபரிநீர் திறந்து விடப்படும் மதகுகள்.

குன்றத்தூர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. பின்னர், ஒரு வார காலமாக மழை இல்லாததால் நீர்வரத்து முற்றிலும் நின்று போனது.

பின்னர் நேற்று இரவுமுதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏரியில் 10 மில்லியன் கனஅடி நீர் சேர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி ஏரியில் நீரின் உயரம் 21.32 அடி, மொத்த கொள்ளளவு 2,941 மில்லியன் கன அடி, நீர்வரத்து 648 கன அடியாக உள்ளது.

இந்நிலையில் காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பெரும்புதூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பியுள்ளன. இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால் அங்கிருந்து உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும். மேலும் செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை தொட்ட பிறகுதான் ஏரியில் இருந்துஉபரிநீர் திறக்கப்படும். அப்படி திறந்துவிடப்படும்போது அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு முறையான அறிவிப்பு அளித்த பிறகே உபரிநீர் திறக்கப்படும்.

காஞ்சி மாவட்டத்தில் 381 ஏரிகள்பொதுப்பணித் துறையின் மூலமும், 380 ஏரிகள் உள்ளாட்சித் துறையின் மூலமும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. செம்பரம்பாக்கம் ஏரி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x