

புயலின் தாக்கம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைஅதிகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏரிகளை பாதுகாக்கவும் ஏரிக்கரை உடைப்பை தடுக்கவும் பொதுப்பணித் துறையின் சார்பில் 2 அடிநீர் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவாக மேற் கொண்டு வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 33குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழையின் காரணமாக ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிறைந்துள்ளன. தற்போது புயல் காரணமாக பலத்தமழை பெய்யும் காரணத்தால், ஏரிகள் உடையாமல் இருக்கவும் குடியிருப்புகளுக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கவும் பொதுப்பணித் துறையின் சார்பில் ஏரிகளில் 2 அடி தண்ணீரைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறியதாவது: ஏற்கெனவே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைநீரால் ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளன. தற்போது 2 நாட்கள் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனே அதை சீரமைக்க, மணல்மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் முழுமையாக நிரம்பிய ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், தாம்பரம், செம்பாக்கம், நன்மங்கலம், ஆதனூர் உள்ளிட்ட குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் குறைக்கப்படவில்லை எனில் மழைநீர் அதிகமாக வரும்போது ஏரியின் கரை உடைந்து குடியிருப்புகளுக்குள் நீர் செல்ல வாய்ப்புள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், ஏரிகளைபாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.