ராமநாதபுரம் சுகாதாரப் பிரிவில் கொசு மருந்து வாங்கியதில் ரூ.6 கோடி முறைகேடு? - லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மலேரியாவை ஒழிக்க ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பிரிவில் கொசு மருந்து வாங்கியதில் ரூ.6 கோடி முறைகேடு நடந்துள்ளதா என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி என இரு சுகாதார மாவட்டங்கள் செயல் பட்டு வருகின்றன.

ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக மலேரியா ஒழிப்புக்கு கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், கொசு முட்டைகளை ஒழிக்க நீர் நிலைகளில் மீன் வளர்த்தல் மற்றும் 1.27 லட்சம் வீடுகளுக்கு கொசு வலை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மலேரியா ஒழிப்புப் பணியில், 2018-ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை கொசுவை ஒழிக்கும் வகையில் ஆல்பா, சைபர் மெத்தலின் பவுடர், அபேட், பைத்ரியம் உள்ளிட்ட மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. சைபர் மெத்தலின் பவுடர் மட்டும் ஆண்டுக்கு 7 ஆயிரம் கிலோ வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மருந்து தெளிக்கப்படவில்லை என்றும், 2 ஆண்டுகளில் 3 கிலோ பவுடர் மட்டும் வாங்கப்பட்டதாகவும், தணிக்கையின்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டன. சுமார் ரூ.6 கோடி அளவுக்கு கொசு மருந்துப் பவுடர் உள்ளிட் டவை வாங்கப்பட்டதில் முறை கேடு நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் சுகாதாரப் பணிகள் முன்னாள் துணை இயக்குநர்கள், மாவட்ட மலேரியா அலுவலர் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘‘கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு தொடர் பான புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகாருக்கான முகாந்திரம் உள்ளதா என அவர்கள் கூறிய பிறகே துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்.’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in