Last Updated : 25 Nov, 2020 03:15 AM

 

Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

தொகுதி உடன்பாடு எட்டப்படும் முன்பே திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு ‘மவுசு’ - திமுக, மதிமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் போட்டியிட ஆர்வம்

பெதொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட திமுக தோழமைக் கட்சிகளிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியை கேட்டுப் றுமாறு அந்தந்த கட்சியின் நிர்வாகிகள், கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்தல், கட்சியின் கட்டமைப்பை கிளை வாரியாக விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பணி களில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த விஷயங்களும் கட்சி தலைமைகள் மூலம் மறைமுகமாக பேசப்பட்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், திமுகவுடன் தோழமையாக உள்ள கட்சிகளிடையே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைப் பெற போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 2,46,226 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதி, மாநகரில் 24 வார்டு கள் அமையப்பெற்றுள்ளது.

அதேபோல பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பரவலாக இருப்பதால் இத் தொகுதியைக் கேட்டுப் பெற்றால் பிரச்சார பணிகளை எளிதில் மேற்கொள்ளலாம் என்ற எண்ணம் கட்சி களிடத்தில் காணப்படுகிறது.

தீவிரம் காட்டும் திமுக

தற்போது திருவெறும்பூர் எம்எல்ஏவாக உள்ள தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த முறை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்பி, கடந்த 2 ஆண்டுகளாக அதற்கான களப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

மேலும் திமுக தலைமை யிடம் செல்வாக்குடன் இருப்பதால் இத்தொகுதியை கேட்டுப் பெறு வதற்கான முயற்சியிலும் ஈடு பட்டுள்ளார். அதேபோல மாந கரச் செயலாளராக உள்ள மு.அன்பழகன், பகுதி செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோரும் இத்தொகுதியைப் பெற அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முனைப்பு காட்டும் முஸ்லிம் லீக்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட மணப்பாறை தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தோல்வியை தழுவியது. இதனால் இந்த முறை திருச்சி கிழக்குத் தொகுதியை கேட்டுப் பெற வேண்டும் என அண்மையில் திருச்சியில் நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் முன்னிலை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

களம் காண காங்கிரசும் ஆசை

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெரோம் ஆரோக்கியராஜ், தற்போது அமைச்சராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜனிடம் தோல்வியைத் தழுவினார். எனினும், இந்த முறை எப்படியாவது இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுப் பெற வேண்டும் என அக்கட்சித் தலைமையிடம் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மல்லு கட்ட மதிமுகவும் தயார்

மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்து மறைந்த மலர்மன்னன் 2 முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களில் இங்கு போட்டியிட்டு வந்துள்ளதாலும் இம்முறை திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதியை எப்படியாவது கேட்டுப் பெற வேண்டும் என மதிமுக மாவட்ட நிர்வாகிகள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x