

திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் காமராஜ், கண்காணிப்பு அலுவலர் மணிவாசன், ஆட்சியர் வே.சாந்தா ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மேற் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், புயல் காற்று வீசுவதால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளை அகற்றி வருகின்றனர். மேலும், கூரை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளில் தார்ப்பாய் போட்டு கட்டி தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் முன்னெச்ச ரிக்கையாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி கடைவீதிகளில் குவிந்தனர். 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அனுபவத்தை ஏற்படுத்தியதால், தற்போது பொதுமக்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.