

ஒரே ஒரு தற்காலிகப் பணியாளரும் பணிக்கு வராததால் விளாத்திகுளத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது.
விளாத்திகுளம் பிஎஸ்என்எல். அலுவலகம் வேம்பார், சூரங்குடி,பேரிலோவன்பட்டி, சிவஞானபுரம், நாகலாபுரம், புதூர், மேலக்கரந்தை ஆகிய ஊர்களுக்கு தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் துணைக் கோட்ட அதிகாரி முதல் 10 பேர் வரை வேலை பார்த்து வந்தனர். பிப்ரவரி மாதம் முதல் இளநிலை பொறியாளர் மட்டுமே பணியில் உள்ளார். .
இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கடந்த ஜனவரி 31-ம் தேதி சுமார் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செல்போன், தரைவழி, இணையதள சேவை ஆகியவற்றுக்கான பில் தொகை வசூலிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்தத்துக்கு விடப்பட்டது.
இதன்படி, விளாத்திகுளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டிருந்த நபர் தான் பில் தொகை வசூல், புதிய சிம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம்வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பணிக்கு வராததால் அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் புதிய சிம் கார்டுவசதி, புதிய தரைவழி இணைப்பு மற்றும் இணைய சேவை உள்ளிட்டவற்றை பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.மோகன்தாஸ் கூறும்போது, ‘‘பிஎஸ்என்எல் சேவையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் இதுவரை முழுமையாக 4ஜி இணைப்புக்கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியவில்லை. இன்னும் 3ஜி சேவையை வைத்து தான் ஒப்பேற்றுகின்றனர்.
விருப்ப ஓய்வில் 50 சதவீத பணியாளர்கள் வெளியே சென்றுவிட்டனர். மீதமுள்ள 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு முழுமையான சேவையை வழங்க முடியாது. நிரந்தர ஊழியர்களுக்கே 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு 12 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எனவே, வாடிக்கையாளர்கள் நலன் கருதி போதிய பணியாளர்களை நியமித்து முறையாக இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
புதிய சிம் கார்டு வசதி, புதிய தரைவழி இணைப்பு மற்றும் இணைய சேவை உள்ளிட்டவற்றை பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.