Published : 24 Nov 2020 07:39 PM
Last Updated : 24 Nov 2020 07:39 PM

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பிலும் உயர் சிறப்பு மருத்துவத்திலும் 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்குக: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவத்திலும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி இந்த ஆண்டே கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் இன்று (நவ. 24) வெளியிட்ட அறிக்கை:

"முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் தமிழக கிராமப்புற சேவை மருத்துவர்களுக்கு இருந்து வந்த 50% இட ஒதுக்கீடு கடந்த 2017-ம் ஆண்டு எம்.சி.ஐ. விதிகளைக் காரணம் காட்டிப் பறிக்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்பில் மாநில உரிமையை நிலைநாட்ட 21 நாட்கள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தால் நடத்தப்பட்டது. தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தனியார் மருத்துவர்களால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டது. நமது தரப்பும் இட ஒதுக்கீடு வேண்டி வாதிட்டது. தீர்ப்பு சாதகமாக வரவில்லை. 2017-ம் ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் சட்டப்போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டு [WP.NO.196/2018 TNMOA VS UNION OF INDIA], தொடர்ந்து வாதங்கள் நடந்து வந்த நிலையிலும் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுக்கான முகாந்திரம் இருப்பதாக கருதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்குப் பரிந்துரைத்தது.

கடந்த 31.08.2020 அன்று நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி மாநில உரிமைகளுக்கு அனுமதி வழங்கியது. மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்கள் 50% இட ஒதுக்கீட்டினை கிராமப்புறத்தில் பணியாற்றும் சேவை மருத்துவர்களுக்கு வழங்கலாம் எனவும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகள் இட ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்தாது எனவும் தீர்ப்பளித்தது [WP.NO.196/2018 TNMOA VS UNION OF INDIA].

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொள்கை முடிவெடுத்துத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த நிலையில் உயர்சிறப்பு மருத்துவத்திலும் ஏற்கெனவே இருந்து வந்த 50% இட ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்களும், மருத்துவர்கள் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பிய நிலையில் உச்ச நீதிமன்றதில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (TNMOA) பெற்ற முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் வழங்கப்பட்ட 50% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உயர் சிறப்பு மருத்துவத்திலும் 50% இட ஒதுக்கீட்டை அரசு மருத்துர்களுக்கு வழங்கலாம் என்ற தீர்ப்பை அளித்தார்.

தமிழக அரசு, உடனடியாக 07.11.2020 அன்று அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவம் (PG) மற்றும் உயர் சிறப்புப் பிரிவுகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தது (G.O.462, 463). இதனை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது. இதற்கிடையே தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உயர்சிறப்பு மருத்துவத்தில் 50% இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் தனியார் மருத்துவர்கள் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

தமிழக அரசு, அரசு மருத்துவர்களின் முதுநிலைப் படிப்பிலும் (PG) மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவத்திலும் 50% இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடிப்படையாக வைத்து வெளியிட்ட அரசாணையை (G.O. 462, 463) ஏற்கெனவே எடுத்த கொள்கை நிலைப்பாட்டின்படி எடுத்து நடப்பு மருத்துவக் கல்வியாண்டிலே கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (TNMOA) தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறது.

சுகாதாரத் துறையில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் சிறப்பான சுகாதாரக் குறியீட்டினைப் பெற்றுத்தரும் தமிழகத்தைச் சார்ந்த அரசு மருத்துவர்களுக்கு, தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவான தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பிலும், உயர்சிறப்பு மருத்துவத்திலும் (Super speciality) 50% இட ஒதுக்கீடு உறுதியாக வழங்கிட தமிழக அமைச்சரவையில் சிறப்புக் கூட்டத்தின் வாயிலாக, கொள்கை முடிவின்படி சிறப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றி மருத்துவப் பேரிடர் காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே இருந்துவந்த 50% இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத்தரும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (TNMOA) தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறது.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவத்திலும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை (G.O. 462, 463) நடைமுறைப்படுத்தி இந்த ஆண்டே கலந்தாய்வு நடத்திடக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x