

நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (நவ.24) வெளியிட்ட அறிக்கை:
"வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், எப்போதும்போல மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்பதற்கான முன்னேற்பாடுகளை அமமுகவினர் மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் புயலால் மக்களுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படக்கூடாது என நாம் பிரார்த்திக்கும் அதே நேரத்தில், ஒரு வேளை ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும்.
ஏனெனில், இயற்கைப் பேரிடர் நேரங்களில் நேரடியாகக் களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருவதில் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறோம்.
கஜா புயல் நேரத்தில் அமமுகவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு, பகலாக இருந்து ஆற்றிய பணிகளை இப்போதும் டெல்டா பகுதி மக்கள் நினைவுகூர்கின்றனர். எனவே, புயலுக்கு முன்பும், புயல் கரையைக் கடந்த பின்னும் மக்களுக்கு உதவும் பணிகளை அமமுகவினர் மிகுந்த கவனத்தோடும், பாதுகாப்போடும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.