

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் 50 சதவீத மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியதும், அங்கிருந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காரைக்குடிக்கு மாற்றப்பட்டது. மேலும் இடவசதி இல்லாததால் ஒரே இடத்தில் செயல்பட வேண்டிய இம்மருத்துவமனை ரயில்வே பீடர்ரோடு, சூரக்குடி ரோடு ஆகிய 2 இடங்களில் செயல்பட்டு வருகிறது.
ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கட்டிடத்தில் அவசர சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளும், சூரக்குடி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு போன்றவையும் செயல்படுகின்றன. இம்மருத்துமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை வருகின்றனர்.
இம்மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாறி 7 ஆண்டுகளாகியும் பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்தது 44 மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் வெறும் 24 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். கண், காது மூக்கு தொண்டை, தோல் மருத்துவர்கள் இல்லை. மாற்றுப்பணியில் ஒருசில நாட்கள் மட்டும் வந்து செல்கின்றனர்.
அதேபோல் 40 சதவீதத்திற்கு மேல் செவிலியர், உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையை சுற்றிலும் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார் கூறியதாவது: மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இருந்தும் பயனில்லை. விபத்தில் சிறிய காயம் ஏற்பட்டால் கூட சிவகங்கை, மதுரைக்கு அனுப்புகின்றனர்.
போதிய மருத்துவர்கள் இல்லாததால் முறையாக சிகிச்சை அளிப்பதில்லை. பிரசவங்கள் மட்டும் அதிகளவில் பார்க்கப்பட்டாலும், கர்ப்பிணி, தாய்மார்கள், அவர்களுக்கு உதவியாக இருப்போருக்கு உணவு, டீ வாங்குவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியநிலை உள்ளது.
இதனால் மருத்துவமனையில் அம்மா உணவகம், கேன்டீன் தொடங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்துள்ளோம், என்று கூறினார்.