Published : 24 Nov 2020 06:39 PM
Last Updated : 24 Nov 2020 06:39 PM

நாகர்கோவிலில் விஜயகுமார் எம்.பி. வீட்டின் முன்பு கிடந்த வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள்; கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை

நாகர்கோவிலில் விஜயகுமார் எம்.பி. வீட்டின் முன்பிருந்து வெடிகுண்டு போன்ற மர்மப் பொருட்களை போலீஸார் கைப்பற்றினர். அதை வீசி சென்றவர்கள் குறித்து அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக மாநிலங்களவை எம்.பி. விஜயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சியை சேர்ந்தவர். இவர் நாகர்கோவில் அரசு சுற்றுலா மாளிகை எதிரே உள்ள வெள்ளாளர் காலனி பகுதியில் வசித்து வருகிறார். தற்போது விஜயகுமார் எம்.பி. டெல்லி சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் மனைவி, மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.

இந்நிலையில் விஜயகுமார் எம்.பி.யின் வீட்டு முன்பு பந்து போன்று உருண்டை வடிவில் நாட்டு வெடிகுண்டு வடிவில் மர்ம பொருள்கள் கிடந்தது. அதன் அருகே வெடிமருந்து துகள்கள் சிதறி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் எம்.பி.யின் வீட்டில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுததனர். நேசமணிநகர் போலீஸார் அங்கு சென்ற விசாரணை நடத்தினர்.

அப்போது வெடிகுண்டு போன்றே பொருட்கள் வீட்டின் முன்பு கிடந்ததால் அதன் அருகே போலீஸார் செல்லவில்லை. வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டை கண்டறியும் நிபுணர்கள் வந்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னர் வெடிகுண்டு போன்ற பொருட்களை அங்கிருந்து அகற்றினர்.

இதேபோல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட இரு பொருட்கள் வெடி மருந்துகளை நிரப்புவது போன்று குண்டு வடிவில் இருந்தது. அவற்றை போலீஸார் மண் நிரப்பிய பக்கெட்டில் போட்டு வைத்தனர்.

பக்கத்திலும் வெடி மருந்து சிதறல்கள் இருந்ததால் வெடிகுண்டு போன்ற பொருட்களை வீசும் எண்ணத்தில் வந்தவர்கள், வீட்டின் முன்பே அவற்றை போட்டு விட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றிய உண்மை நிலையை அறிய விஜயகுமார் எம்.பி.யின் வீடு மற்றும் பக்கத்தில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தகவல் அறிந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மற்றும அதிமுகவினர் விஜயகுமார் எம்.பி.யின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினர், மற்றும் போலீஸாரிடம் விவரங்களை கேட்டறிந்தனர். இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x