

சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30 வரையிலும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது;
"தமிழகத்தில் நிவர் புயல் தீவிரமடைந்து காவிரி டெல்டா முதல் மாமல்லபுரம் வரையிலும் கரையைக் கடக்கக் கூடும் என்றும், பெருமழைப் பொழிவைச் சந்திக்க வேண்டிய நிலை வரும் என்றும், காற்று 120 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை வந்திருக்கிறது.
நெல் பயிரிட்ட விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு மத்திய - மாநில அரசுகளுடைய மந்தமான நடவடிக்கைகளால் காலம் கடந்துவிட்டது. குறிப்பாக, பயிர்க் காப்பீட்டு நிறுவனம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டதால் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் மூலம்தான் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில்தான் இப்கோ டோக்தியோ என்கிற நிறுவனத்திற்குக் காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் முன்கூட்டியே காப்பீடு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.
மேலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்கும் அதிகாரத்தை ரத்து செய்ததால், மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களுக்கான பிரீமியம் மட்டும் பெறப்பட்டுள்ளது. கடன் பெறாத விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பிரீமியம் பெற மறுத்துவிட்டன. இதனால் 80 சதவீத விவசாயிகள் உரிய காலத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல் தனியார் இணையதள நிறுவனங்களில் காத்துக் கிடக்கின்றனர். தற்போது மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதாலும் கணினியில் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளதாலும் காப்பீடு செய்வதற்கு இயலாத நிலை உள்ளதால் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.
இந்த நிலையில் மத்திய - மாநில அரசுகள், நவம்பர் 30 வரையிலும் பிரீமியம் செலுத்துவதற்குக் கால அவகாசம் இருந்தும் 24-ம் தேதி நிவர் புயல் தாக்கத் தொடங்குவதற்கு முன் பிரீமியம் செலுத்தினால்தான் நிவர் புயலில் இழப்பீடு பெற முடியும், இல்லையேல் இழப்பீடு கிடைக்காது என்று மிரட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது. காரணம், சாகுபடிப் பயிர்களுக்கான இழப்பீடு என்பது அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பிப்ரவரியில் கள ஆய்வு மூலம் முடிவு செய்யப்படும். அப்படியிருக்கையில் தற்போது இழப்பீடு உண்டா, இல்லையா என்ற நிலைக்குச் செல்வது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே பிரீமியம் செலுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடு வரையிலும் பிரீமியம் செலுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மேலும், இணையதளச் சேவையில் ஏற்படும் காலதாமத்தைப் போக்கி கையால் எழுதிக் கொடுக்கப்படுகிற அத்தாட்சி அடிப்படையில் பிரீமியத் தொகையை அவசரக் காலத்தில் செலுத்துவதற்கான நடைமுறையையும் அனுமதிக்க வேண்டும்.
கடந்த கஜா புயலின்போது ஒன்றே கால் கோடி தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் இதுவரையிலும் 65 லட்சம் தென்னை மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. அழிந்த மீதித் தென்னை மரங்கள், அடங்கலில் பதிவேற்றம் செய்யாததைக் காரணங்காட்டி இழப்பீடு வழங்க மத்திய - மாநில அரசுகள் மறுத்துவிட்டன.
தற்போது நிவர் புயலால் தென்னை மரங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கக் கூடும் என்கிற எச்சரிக்கை வந்திருக்கிறது. இந்நிலையில் காப்பீடு செய்வதற்கு நடைமுறையில் சாத்தியமில்லாத நிபந்தனைகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக, காப்பீடு செய்ய வேண்டும் என்றால் பேரிடர் வருவதற்கு முன்னதாகவே செய்யப்பட வேண்டும், ஒரு மாதம் முடிந்த பிறகுதான் அது செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
தற்போது காப்பீடு செய்தாலும் பெரு மழை அல்லது புயலால் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெற முடியாது என்று கைவிரிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தமிழக அரசு மத்திய அரசோடு பேசித் தீர்வு காண முன்வரவேண்டும்."
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.