Published : 02 Oct 2015 01:41 PM
Last Updated : 02 Oct 2015 01:41 PM

புற்றுநோய் வருவது 80 சதம் நம் கையில் இல்லை! புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

புற்றுநோய் வருவது, 80 சதவீதம் நம் கையில் இல்லை என மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனை டீன் ரேவதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜசேகர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ், டாக்டர் வசந்தமாலை, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரசேகரன் கலந்துகொண்டனர். இந்த கருத்தரங்கில், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டு மார்பகப் புற்று நோய் சம்பந்தமான தங்கள் சந்தேகங்களை கேட்டனர். அதற்கு புற்றுநோய் மருத்துவ நிபுனர்கள் விளக்கமளித்தனர்.

மருத்துவப் பணியாளர்கள்: ஆஷ்பெட்டாஷ் ஷீட் வீடுகளில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதாக கூறப்படுகிறதே. அது உண்மையா?

டாக்டர் ரமேஷ்: ஆஷ்பெட்டாஷ் ஷீட் வீடுகளில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பில்லை. ஆனால், ஆஷ்பெட்டாஷ் ஷீட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அங்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் துகள்கள் மூலம் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

செவிலியர்கள்: புற்று நோய் கட்டியை எப்படி கண்டுபிடிப்பது?

டாக்டர் ராஜசேகர்: மருத்துவரை பார்க்காமலே கொழுப்பு கட்டி, சாதாரணக் கட்டி என விட்டுவிடக்கூடாது. வலி வர ஆரம்பித்தவுடன்தான் மருத்துவரிடம் வருகின்றனர். ஆரம்பத்திலே எல்லா வகை புற்றுநோய்க்கும் மருத்துவரை சென்று பார்த்தால் குணப்படுத்தக் கூடியதுதான். 70 முதல் 80 சதவீதம் புற்றுநோயாளிகள் கடைசி கட்டத்தில்தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவப்பணியாளர்கள்: புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருவதாக கூறுகிறார்கள். அதுபோல், மார்பகப் புற்றுநோய் எதனால் வருகிறது?

டாக்டர் ரமேஷ்: மார்பக புற்றுநோய் பெண்களுக்கு அதிகமாக வருகிறது. இந்த காரணத்தால்தான் வருகிறது என குறிப்பிட்டுக்கூற முடியாது. இயற்கையாகவே வருகிறது. 10 சதவீதம் ஹார்மோன்கள் அதிகளவு சுரப்பதாலும் அம்மா, சித்தி, பாட்டி உள்ளிட்டவர்களுடைய மரபணுக்கள் மூலமே வர வாய்ப்புள்ளது.

மருத்துவப் பணியாளர்கள்: புற்றுநோய் வந்த பெண் தெரியாமலே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த குழந்தைகளுக்கு புற்றுநோய் வருமா?

டாக்டர் வசந்தமாலை: புற்றுநோய் ரத்தம் மூலமும், தொடுவதாலும் பரவாது. அதனால், குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவ வாய்ப்பில்லை. தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாக கூறுவது மூடநம்பிக்கை.

செவிலியர்கள்: புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பு மீண்டும் வர வாய்ப்புள்ளதா?

டாக்டர் ரமேஷ்: மீண்டும் வர வாய்ப்புள்ளது. 1965-ம் ஆண்டில் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளி தற்போது வரை நலமாக இருக்கிறார். மீண்டும் வராமல் இருக்க சிகிச்சைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்.

மருத்துவர்கள்தான் ரோல் மாடல்

அரசு மருத்துவமனை டீன் ரேவதி கூறியது: 80 சதவீதம் புற்றுநோய் வருவது நம் கையில் இல்லை. வருமுன் காப்போம் என்பது இதில் இல்லை. படித்தவர்களிடமும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. ஏன், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்கூட புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வதே இல்லை. இதில் மருத்துவர்கள் மிக மோசம். புற்றுநோய் மருத்துவ சிகிச்சை விழிப்புணர்வில் முதலில் டாக்டர்கள்தான் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனால், இனி அனைத்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் கட்டாயம் மார்பக புற்றுநோய் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x