Published : 24 Nov 2020 06:17 PM
Last Updated : 24 Nov 2020 06:17 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,950 ஏரிகளில் 19 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன: வடகிழக்குப் பருவமழை கைகொடுக்குமா?

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரி.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,950 ஏரிகளில் 19 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை மற்றும் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால், வானம் பார்த்த பூமியாக நீர்நிலைகள் உள்ளன. இதனால், வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கி அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் காத்திருக்கின்றன. இந்த நிலையில், நிவர் புயலை ஒட்டி கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நீர்நிலைகள் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 697 ஏரிகளும், உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் 1,253 ஏரிகளும் என மொத்தம் 1,950 ஏரிகள் உள்ளன. இவற்றில் 19 ஏரிகளில் மட்டுமே, 100 சதவீதம் தண்ணீர் உள்ளன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 4 ஏரிகளும், உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் 15 ஏரிகளும் அடங்கும். மாவட்டத்தில் 1 சதவீத ஏரிகள் மட்டுமே, முழுமையாக நிரம்பியுள்ளன.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 11 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 51 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 175 ஏரிகளும், 24 சதவீதத்துக்கு உட்பட்டு 456 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

இதேபோல், உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை ஒரு ஏரியும், 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை 5 ஏரிகளும், 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 6 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை 107 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 345 ஏரிகளும் நிரம்பியுள்ளன. 25 சதவீதத்துக்குக் குறைவாக 679 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. 95 ஏரிகள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.

அணைகளின் நிலவரம்

119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 89.35 அடியாக உள்ளது. அணையில் 2,380 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 254 கன அடி தண்ணீர் வருகிறது. 60 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 39.52 அடியாக உள்ளது. அணையில் 288 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து ஏரிகளுக்கு விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

இதேபோல், மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 22.97 அடியில் 6.89 அடியாக உள்ளது. அணையில் 88 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மேலும், செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 62.32 அடியில் 48.74 அடியாக உள்ளது. அணையில் 163 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5 கன அடி தண்ணீர் வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்தால் மட்டுமே அணைகள் மற்றும் ஏரிகள் ஆகியவை முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது. நீர்நிலைகள் நிரம்பவில்லை என்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதுகெலும்பாக உள்ள விவசாயம் பெரிதும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x