தீபா, தீபக் பணம் கட்டினால் போலீஸ் பாதுகாப்பு தரத் தயார்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தீபா, தீபக் பணம் கட்டினால் போலீஸ் பாதுகாப்பு தரத் தயார்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Published on

தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும், அதற்கான முன்பணமாக 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தைச் செலுத்தினால் பாதுகாப்பு தரப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டபூர்வ வாரிசுகளாக அறிவித்து, 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது.

அத்துடன், அவர்களின் சொந்தச் செலவில் தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவர்களது அத்தையான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளையாகத் தோற்றுவித்து அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “தீபா, தீபக்கிற்குப் பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளது. அதற்கான முன்பணமாக 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தைச் செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்

தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கும், தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா எனக் கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென்றும் தெரிவித்தார்.

தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் கடிதத்துக்கு பதிலளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு வேண்டாம் என்றால் நீதிமன்றத்தில் தெரிவித்துவிடலாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தீபா, தீபக் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in