

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொள்ளாச்சியில் சந்தித்துப் பேசினார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக தேமுதிக ஒரு இடம்கூட பெறவில்லை.
இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படப்பிடிப்பில் விஜயகாந்த் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள வாழக்கொம்பு நாகூர் பகுதியில் ஒரு விடுதியில் விஜயகாந்த் தங்கியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் சந்தித்தார். தனியார் விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.