Published : 24 Nov 2020 03:01 PM
Last Updated : 24 Nov 2020 03:01 PM

பொதுமக்கள் சேவைக்காக தீயணைப்புத்துறை வெளியிட்ட தீ அலைபேசி செயலி: முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் பொதுமக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள "தீ" எனும் அலைபேசி செயலியை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, "காக்கும் பணி எங்கள் பணி" என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள் போன்றைவைகளிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட தமிழக அரசு, பல்வேறு நவீன கருவிகளையும், புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் "தீ" எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அலைபேசி செயலியின் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகுவதற்கும், அழைத்த 10 வினாடிக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவி கோரும் இடத்திற்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உதவுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக "தீ" செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள் (Tablets) அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீக் கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி இன்று "தீ" செயலியுடன் கூடிய முதல் கைக்கணிணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி ஜாஃபர் சேட்டிடம் வழங்கினார்.

"தீ" செயலியை மக்கள் தங்களது அலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, விபத்து அல்லது இடர்பாடுகள் ஏற்படும்போது உடன் தகவல் தருவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை டிஜிபி திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபி ஜாஃபர் சேட், இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இணை இயக்குநர் ப்ரியா, ஆம்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x