Published : 24 Nov 2020 01:06 PM
Last Updated : 24 Nov 2020 01:06 PM

ஓசூரில் நடப்பாண்டில் உரிமம் இல்லாத 38 நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்றிய வனத்துறையினர்

ஓசூர் அருகே உள்ள கிராமங்களில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை உரிமம் இன்றி வைத்திருந்த 38 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டம் ஜவளகிரி வனச்சரகத்தில் கடந்த 3-ம் தேதி பெண் யானைக்குட்டி ஒன்று குண்டடி பட்டு உயிரிழந்த வழக்கில் வனத்துறையினரால் சென்னமாளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி ஜவளகிரி வனச்சரகத்தில் உரிமம் இன்றி வைத்துள்ள நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படி வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கிராம மக்கள் ஒப்படைத்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினர் கைப்பற்றினர். ஜவளகிரி வனச்சரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் செ.பிரபு, உதவி வனப்பாதுகாவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், வனவிலங்கு கால்நடை மருத்துவர் பிரகாஷ், துணை காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல், தளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் நாட்டுத் துப்பாக்கிகளைப் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஜவளகிரி வனச்சரகத்தில் உரிமம் இன்றி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் பொருட்டு மலைக் கிராமங்களான சென்னமாளம், சூளகுண்டா, நந்திமங்கலம், தேவர்பெட்டா மற்றும் பேலகரை ஆகிய கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஓசூர் வன உயிரினக் காப்பாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள் ஜவளகிரி காப்பக்காட்டில் உள்ள கக்கமல்லேஷ்வரன் கோயில் மற்றும் பாண்டவர்பண்டா பகுதியில் 22-ம் தேதியன்று 9 நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற ஜவளகிரி வனச்சரகர் மற்றும் வனப்பணியாளர்கள் குழுவினர், அங்கு கேட்பாரற்று கிடந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்றினர்.

இந்த நாட்டுத் துப்பாக்கிகள் அனைத்தும் ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. நடப்பாண்டில் முதல் கட்டமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியன்று அஞ்செட்டி, உரிகம் ஆகிய வனச்சரகங்களில் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகளைக் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

இரண்டாவது கட்டமாக ஆகஸ்டு 14-ம் தேதியன்று உரிகம் வனச்சரகம் - 6, தேன்கனிக்கோட்டை -12, ஓசூர் - 1, என மொத்தம் 19 நாட்டுத் துப்பாக்கிகளும், தற்போது 3-வது கட்டமாக ஜவளகிரி வனச்சரகத்தில் 9 நாட்டுத் துப்பாக்கிகளும் என நடப்பாண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 38 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மாவட்ட வன அலுவலர் பிரபு கூறினார்.

அப்போது ஜவளகிரி வனச்சரகர் நாகராஜன், தேசிய காடு வளர்ப்புத் தலைவர் முனிராஜ், பஞ்சாயத்துத் தலைவர் நாகரத்தினம்மா மற்றும் வனப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x