

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் 26-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலாகிறது.
'நிவர்' புயல் நாளை (நவ.25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிவர் புயலை எதிர்கொள்ள புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பூர்வா கார்க் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ. 24) நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தைத் தொடர்ந்து புதுச்சேரி ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில், "நிவர் புயல் காரணமாகப் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதைக் கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் 26-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலாகிறது.
அனைத்துக் கடைகளும் இந்த நாட்களில் மூடியிருக்க வேண்டும். பேரிடர் பணிகளில் ஈடுபடுவோர், பாண்லே பால் பூத், பெட்ரோல் பங்க், மருந்தகங்கள், சுகாதார சேவைப்பணியில் ஈடுபட்டோருக்கு விலக்குத் தரப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.