

தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து வரும் 26-ம் தேதி முதல் 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 24) வெளியிட்ட அறிக்கை:
"தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு தண்ணீர் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு 26.11.2020 முதல் 30.3.2021 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், தென்காசி மாவட்டம், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மாதேவி வட்டங்கள் ஆகியவற்றில் உள்ள 32 ஆயிரத்து 24.58 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.