

தமிழக மக்கள் நிவர் புயலால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கவும், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றவும், முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 24) வெளியிட்ட அறிக்கை:
"வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் உருவாகி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என்று வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியை தமிழக மக்கள் முக்கிய கவனத்தில் கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும்.
நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் மழையோ, கனமழையோ, மிக கனமழையோ பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நிவர் புயல் காரணமாக பெய்யும் மழையினால் ஏற்படும் பாதிப்பில் தமிழக மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. குறிப்பாக, டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டப் பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் அப்பகுதி வாழ் மக்கள் மழையின் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
தமிழக அரசு நிவர் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
மிக முக்கியமாக அரசின் அறிவிப்புகளான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதும், தாழ்வான பகுதி மக்கள் முகாம்களுக்குச் செல்வதும், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதும் மிகவும் அவசியமானது.
புயல் காரணமாக எவரும் அச்சம் அடையாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தங்களையும், தங்கள் உடைமைகளையும் பாதுகாக்கலாம், இழப்புகளையும் தவிர்க்கலாம்.
மேலும், கடந்த காலப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் மக்கள் நினைவுபடுத்தி தங்களைப் பாதுகாக்க வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இயற்கையால் சில சமயங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதனை நாம் சமாளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கும்போது பயத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். இந்நிலையில், புயல் தீவிரமடையும் என்பதால் அதி தீவிரப் புயலில் இருந்து பாதுகாப்பதன் அவசியத்தைக் கவனத்தில் கொண்டு நாமெல்லாம் அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் துணை நின்று, அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் புயலைக் கடந்து செல்வோம்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.