

நள்ளிரவு 2.30 மணி நிலவரப்படி புதுவையின் கிழக்கு தென்கிழக்கு திசையிலிருந்து 440 கி.மீ. தொலைவிலும். சென்னையிலிருந்து 470 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலையில் நிவர் புயலாக மாறியுள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டது. நள்ளிரவு 2.30 மணி நிலவரப்படி புதுவையின் கிழக்கு தென்கிழக்கு திசையிலிருந்து 440 கி.மீ. தொலைவிலும். சென்னையிலிருந்து 470 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலையில் நிவர் புயலாக மாறியுள்ளது
இன்று மாலையில் இது தீவிரப் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே நிவிர் தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது''.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை பிற்பகல் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் நாளை மாலை கடக்கும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.