Last Updated : 24 Nov, 2020 03:13 AM

 

Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

சசிகலா டிசம்பர் மாதம் விடுதலை ஆகிறார்: கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தகவல்

பெங்களூரு சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதையடுத்து அதே ஆண்டுபிப்ரவரி 15ம் தேதி சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சரணடைந்தனர்.

மூவரின் தண்டனை காலமும் நிறைவடைய உள்ள நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மூவரும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரத்தை பெங் களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

கடந்த 18ம் தேதி சசிகலாவின் அபராதமாக ரூ.10 கோடியே 10 ஆயிரம் செலுத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா சசிகலாவை விடுதலை செய்வதற்கு தடையில்லை என்பதற்கான ஆணையை சிறைத்துறைக்கு வழங்கினார். இதனிடையே சசிகலாவின் தரப்பில் தனக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி 126 நாட்கள் சலுகை வழங்க முடியும். எனவே முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

விடுதலை கணக்கு

இதையடுத்து கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் சசிகலாவை எப்போது விடுதலை செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கெடுத்தால் 2021ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியுடன் 4 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைகிறது. இடையில் இரண்டு கட்டங்களாக 17 நாட்கள் மட்டுமே சசிகலா பரோலில் வெளியே வந்துள்ளார்.

அதே போல இறுதி தீர்ப்புக்கு முன் சசிகலா சென்னை மற்றும் பெங்களூரு சிறையில் 35 நாட்கள் இரு கட்டங்களாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார். சிறையில் இருந்த 35 நாட்களில் பரோலில் வெளியே சென்ற 17 நாட்களை கழித்து, 2021 ஜனவரி 27-ல் விடுதலை செய்யலாம் என முன்பு உத்தேசமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக சிறைத்துறை விதிமுறையின்படி கைதி சிறையில் இருந்த விடுமுறை தினங்கள் கணக்கிடப்பட்டு, அதில் இருந்தே பரோலில் சென்ற நாட்களை கழிக்க வேண்டும்.

அதன்படி பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா 100க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களில் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களில் இருந்து பரோலில் சென்ற 17 நாட்களை கழித்தால் ஜனவரி 27ம் தேதிக்கு முன்பே அவரை விடுதலை செய்ய வேண்டும். மேலும் சசிகலா சிறையில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் பயின்றுள்ளார். சிறை நன்னடத்தை விதிகளின்படி அதனை கணக்கிட்டால் ஒரு மாதம் வரை சலுகை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இருக்கிறது.

சசிகலா சிறையில் இருந்த 35 நாட்கள், சிறையில் கழித்த சுமார் 100 விடுமுறை நாட்கள், கன்னடம் கற்றதற்கு 10 நாட்கள் என கணக்கிட்டால் மொத்தமாக அவர் 2021ம் ஆண்டு பிப்ரவரி 14ல் இருந்து 145 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது காலம் கடந்த முடிவென்பதால் டிசம்பரில் அவரை விடுதலை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சசிகலாவின் வழக்கறிஞர் நாளை (புதன்கிழமை) சசிகலா சென்னை சிறையில் இருந்ததற்கான ஆதாரங்களை பரப்பன அக்ரஹாரா சிறையில் தாக்கல் செய்ய இருக்கிறார். அதனை அடிப்படையாக வைத்து கர்நாடக சிறைத்துறை சசிகலாவின் விடுதலை தேதியை இறுதி செய்யும் என தெரிகிறது.

இளவரசி ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை நேற்று செலுத்தினார். இளவரசியின் தரப்பில் ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான 6 வரைவோலைகளை சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா முன்னிலையில் தாக்கல் செய்தனர். அதற்கான முறையான வருமான ஆதாரம், வங்கியின் உத்தரவாத சான்று ஆகியவற்றை பரிசீலித்த பின் நீதிபதி அதனை ஏற்றார். இதையடுத்து அவரை விடுதலை செய்வதற்கான தடையில்லா சான்றை வழங்கினார். இதனை இளவரசியின் வழக்கறிஞர் அசோகன் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சமர்ப்பிப்பார் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x