

திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: அரசு விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்தது சரியல்ல. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற நாடுகளிலும்கூட வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அது தவிர்க்க முடியாதது. வாரிசுகள் அரசியலுக்கு வருவதை ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பது மக்கள்தான் தெரிவிக்க வேண்டும்.
பாஜக, அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது திமுக கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் இல்லை என்பதைவிட, அவர்களுக்கு எதிரான வாக்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன என்பதுதான் உண்மை. தேர்தலின்போது எத்தனை அணிகள் உருவானாலும் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும்தான் நேரடி போட்டி இருக்கும். அதில், திமுக கூட்டணி வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.