Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாக்களை கொண்டு வந்துள்ள பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை, அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காய்கறி சந்தை அமைக்க வேண்டும்.மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், சட்டப் பேரவைதேர்தலுக்காக விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வரும் பாஜகவுடன், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணி அமைக்க உள்ளது.

இந்த கூட்டணி குறித்து அதிமுக பரிசீலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். மேலும், விவசாயிகளின் நலனை புறக்கணிக்கும் பாஜகவுக்கு எதிராக சட்டமன்ற தேர்தலில் களம் காண்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x