வெடிமருந்து வழக்கில் சிக்கி சிறையில் உள்ள கைதியிடம் பென்-டிரைவ் கொடுத்தது ஏன்?- நுண்ணறிவு போலீஸார் தீவிர விசாரணை

வெடிமருந்து வழக்கில் சிக்கி சிறையில் உள்ள கைதியிடம் பென்-டிரைவ் கொடுத்தது ஏன்?- நுண்ணறிவு போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

வெடிமருந்து பதுக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கைதியிடம் பென்-டிரைவ் கொடுத்தது ஏன் என்பது குறித்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாட்டம் மேலப்பாளையத்தில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்ததாக அஸ்லாம், டேனியல் பிரகாஷ், சுலைமான், புகாரி உள்ளிட்ட 19 பேரைபோலீஸார் கடந்த 2013-ல்கைது செய்தனர். சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவர்கள் 19 பேரும் கடந்த 17-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, குற்றப்பத்திரிகையில் உள்ள விவரங்களை நீதிபதி செந்தூர்பாண்டியன் அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, நீதிமன்றத்தில் இருந்து அவர்களை போலீஸார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது, கைதிகளிடம் அவர்களது உறவினர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

புகாரியை பார்க்க வந்த சையது இப்ராகிம் (52), இம்ரான் (35) ஆகிய இருவரும் கையில் மறைத்து வைத்திருந்த ஒரு பொருளை புகாரியிடம் ரகசியமாக கொடுத்தனர். ஆனால், போலீஸார் இதை பார்த்துவிட்டனர். உடனடியாக புகாரியை சோதனை செய்து, அவரிடம் இருந்து அந்த பொருளை வாங்கிப் பார்த்தபோது, அது பென்-டிரைவ் என தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற இப்ராகிம், இம்ரான் ஆகிய 2 பேரையும் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பூந்தமல்லி போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைதியிடம் எதற்காக பென்-டிரைவ் கொடுத்தனர், அதை போட்டுப் பார்க்கும் அளவுக்கு கைதியின் அறையில் கம்ப்யூட்டர், செல்போன் வசதி உள்ளதா, சிறையில் வேறு கைதியிடம் ஒப்படைப்பதற்காக கொடுக்கப்பட்டதா என போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் வழியில், ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி, அங்கு கட்டாயம் டீ குடிக்க வேண்டும் என்பார்கள். திடீரென ஒரு இடத்தில் நிறுத்தச் சொல்லி இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்பார்கள்.

ரகசிய தகவல் பரிமாற்றம்

இப்படி போலீஸாரை தொந்தரவு செய்து, திசைதிருப்பிவிட்டு, கைதிகள் தங்களுக்குள்ளும், வெளி நபர்களுடனும் ரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்வது உண்டு. வெடி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இவ்வாறு ரகசிய தகவல்களை பரிமாறுகின்றனரா என்ற சந்தேகம் உள்ளது.

பென்-டிரைவில் ஏதேனும் ரகசிய தகவல்கள் உள்ளதா என்று கண்டறிய தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தெரியவந்த பிறகு, பல விஷயங்கள் வெளிவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in