

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற (டான்பிட்) சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி கடந்த 17-ம் தேதி கோவை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரலில் 10 சதவீத அளவுக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சிகிச்சை முடிந்து நேற்றுமுன்தினம் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், கோவை அரசு மருத்துவனையின் டீனுக்கு நீதிபதி ஏ.எஸ்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘‘எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சைக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மட்டும் நான் நன்றி கூறவில்லை.
மற்ற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சரியான ஆலோசனைகள், ஊக்குவிப்பு, அரவணைப்பு ஆகியவற்றுக்கும் சேர்த்தே இந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். சரியான நேரத்தில் இங்கு அளிக்கப்படும் ஊசி, மருந்து, மாத்திரைகள் நோயாளிகள் விரைவில் தேறிவர உதவுகின்றன. குறிப்பாக செவிலியர்கள் ஜூடி, சாந்தி ஆகியோர் சகோதரிகள் போல கவனித்துக் கொண்டனர். சிறந்த நிர்வாகம், உயர்தர மருந்துகள், சுகாதாரமான சூழல், ஊட்டச்சத்து மிக்க உணவு எனத் தனியார் மருத்துவமனைகளைவிட இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு இல்லையெனில் கரோனா தொற்றில் இருந்து நான் மீண்டு வந்திருக்க முடியாது. கரோனாவால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிந்தும் அவர்கள் பணியாற்றுவது போற்றுதலுக்குரியது. எனவே, அரசு அவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றை இரட்டிப்பாக்கி வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அப்படிச் செய்தாலும் அவர்களின் சேவைக்கு அது ஈடாகாது’’.
இவ்வாறு நீதிபதி ஏ.எஸ்.ரவி தெரிவித்துள்ளார்.