நிவர் புயல் எச்சரிக்கை: காரைக்கால் மீனவர்கள் அச்சம் 

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
Updated on
1 min read

நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது கஜா புயல் போல இருக்குமோ என்று காரைக்கால் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகி வரும் நிவர் புயல் நாளை மறுநாள் (நவ.25 ) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனவும், அதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கடல் சீற்றமாகக் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (நவ.23) கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் அந்தந்த மீனவக் கிராமங்களிலும், மீன்பிடித் துறைமுகப் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீனவர்களில் பெரும்பாலானோர் இன்னும் கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறும்போது, ''நிவர் புயல் குறித்த தகவலும், மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் 22-ம் தேதி மீன்வளத்துறை மூலம் கிடைக்கப் பெற்றோம். புயல் கோடியக்கரை- கல்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் யாரும் இனிமேல் தொழிலுக்குச் செல்லக் கூடாது என்றும், ஏற்கெனவே சென்றவர்களை உடனடியாக கரை திரும்புமாறும் சொல்லிவிட்டோம். ஒரு வாரம் முன்னரே தகவல் சொல்லப்பட்டிருந்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்திருப்பார்கள்.

தாமதமாக எங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டதால் நேற்று முன் தினம் வரை மீனவர்கள் தொழிலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இனிமேல்தான் கரை திரும்ப இயலும். கஜா புயல் போல இது இருக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. தொழிலுக்குச் செல்ல முடியாத எங்களுக்கு அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

எப்போதுமே கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் மீட்புக்குழுவினர் முன்னரே அனுப்பப்பட்டு விடுகின்றனர். ஆனால் இங்கு அவ்வாறு செய்வதில்லை. இதற்கு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in