காரைக்காலில் 90 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை; கடலோரக் காவல்படை மூலம் நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

காரைக்காலில் 90 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை; கடலோரக் காவல்படை மூலம் நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி
Updated on
1 min read

காரைக்காலில் 90 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்றும் கடலோரக் கடற்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக மாநிலப் பேரிடர் அவசரகால மையத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நிவர் புயல் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மின்கம்பம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யவும், மரங்களில் உள்ள கிளைகளை வெட்டவும், மரங்கள் கீழே விழாமல் இருக்கப் பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

மின்சாரம் தடைப்பட்டாலும் தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், ஒருவேளை தடைப்பட்டால் 12 மணி நேரத்தில் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். 99 சதவீத மீனவர்கள் புதுச்சேரியில் திரும்பி வந்துவிட்டனர். புதுச்சேரியில் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை இரவுக்குள் கரை திரும்புவார்கள்.

காரைக்காலில் 90 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை, கடலோரக் கடற்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் காலக்கெடு இருக்கிறது. மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்களின் படகு மற்றும் வலைகளைப் பத்திரமாக வைக்க உத்தரவிட்டுள்ளோம். தேவையான மருந்துகளை இருப்பு வைக்கச் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைத் திருமண மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கவைத்து, அவர்களுக்குப் போதுமான உணவு வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் இன்ஜின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் தயாராக ஏற்பாடுகள் செய்துள்ளோம். புதுச்சேரியில் 80 மையங்கள் அமைத்துள்ளோம்.

வியாபார நிறுவனங்களை மூட உத்தரவு

நாளை (24-ம் தேதி) மாலையில் இருந்து 25-ம் தேதி வரை தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். வியாபார நிறுவனங்களை மூடவும் வலியுறுத்தியுள்ளோம். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.

உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் 24 மணி நேரமும் செயல்பட்டு, தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளோம்''.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in