

அரசியல் அனைவருக்கும் பொதுவானது என்பதால் வாரிசு அரசியலில் தவறில்லை என தமிழகக் காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கோவை மருதமலையில் இன்று சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கோவையில் விவசாயிகள் மாநாடு, ஏர் கலப்பைப் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. விவசாய மாநாட்டுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், பேரணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்கள் யாத்திரை மக்களுக்கானது. அரசு தவறான முடிவுகளை எடுக்கும்போது நமது குரலை உயர்த்த வேண்டியது அவசியம். அரசியல் லாபத்துக்காக நாங்கள் யாத்திரை நடத்தவில்லை.
ஆனால், பாஜகவினர் நடத்தும் யாத்திரை சுயநலமானது. கடவுளை சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது தவறு. காங்கிரஸ் எதையும் திணிக்காது. ஆனால், பாஜக திணிக்கிறது. அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாகக் கட்சித் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சட்டமும், நீதிமன்றமும் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் ஏற்கிறோம்.
அரசியல் அனைவருக்கும் பொதுவானது. மக்கள் தீர்ப்பே இறுதியானது. எனவே, வாரிசு அரசியலில் தவறு ஏதும் இல்லை. அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். அவர் என்ன கிரிக்கெட் வீரரா. தனது மகனை வளர்க்க அமித் ஷா நினைக்கவில்லையா? அது வாரிசு அரசியல் இல்லையா?
திமுகவுடன் தொகுதிகள் பங்கீடு குறித்துத் தற்போது எதுவும் சொல்ல இயலாது. கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் இல்லை. தற்போது நாட்டுக்குக் காங்கிரஸ் கட்சியின் தேவை அதிகம் உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது கடமையைச் செய்யும்''.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.