

மதுரையில் சாலைகளில் கடை கடையாக ஏறி யாசகம் செய்த திருநங்கைகளை மீட்டு போலீஸார் விசாரித்ததில் அதில் ஒருவர் எம்பிபிஎஸ் படித்துவிட்டு வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவர் பணிபுரிந்துவந்த தனியார் கிளினிக் அவரை வேலையை விட்டு நீக்கியதோடு, குடும்பத்தினரும் புறக்கணித்ததால் அவர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மதுரை மாநகர் திலகர் திடல் போலீஸார், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் நகர்ப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருநங்கைகள் சிலர், சாலைகளில் உள்ள கடைகளில் யாசகம் செய்து கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை மீட்டு விசாரித்தனர்.
அவர்களிடம், ‘‘எதற்காக யாசகம் செய்கிறீர்கள்? உதங்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருகிறோம். இந்த தொழிலை விட்டுவிடுங்கள், ’’ என்று இன்பெக்டர் கவிதா அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்போது அதில் ஒரு திருநங்கை மதுரை மருத்துவக்கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்து இருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரது மருத்துவப் படிப்பு சான்றிதழ்களை வாங்கிப் பார்த்து மதுரை மருத்துவக் கல்லூரியிலும் விசாரித்துள்ளனர். அதில் அந்தத் திருநங்கை எம்பிபிஎஸ் படித்ததை உறுதி அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா, மாவட்ட காவல்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தை அனுகி, மருத்துவம் படித்த அந்த திருநங்கைக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘மதுரை மருத்துவக் கல்லூரியில் அவர் ஆணாக இருந்தே எம்பிபிஎஸ் படித்துள்ளார். நாங்கள் மருத்துவக்கல்லூரி டீனிடம் விசாரித்தபோது இவர் சிறப்பாகப் படிப்பவர் என்று கூறினார்.
படித்து முடித்ததும், அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளார். கரோனா நேரத்தில் தனியார் கிளினிக் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். இவர் திருநங்கை என்பது தெரிந்ததும் அவர்கள் இவரைப் பணியை விட்டு நீக்கியுள்ளனர். வீட்டிலும் இவரைப் புறக்கணித்துள்ளனர்.
அதனால், விரக்தியில் இவர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக திருநங்கைகளுடன் சேர்ந்து யாகசம் பெற்றுவந்துள்ளார். தற்போது அவருக்கு சில மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து பெத்தானியாபுரத்தில் தனியாக கினிளிக் வைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
வரும் 27-ம் தேதி அந்த கிளினிக்கை திறக்கவுள்ளோம். அவர் ஆணாக இருந்தபோது எம்பிபிஎஸ் படித்ததால் அவரது மருத்துவ சான்றிதழிலும் அதுவே பதிவாகியுள்ளது. அதனால், எதிர்காலத்தில் எந்தப் பிரச்சனையும் வராமல் இருக்க மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மூலம் இந்திய மருத்துவக் கழகத்தையும், மதுரை மருத்துவக் கல்லூரியையும் அனுகி அவரது மருத்துவச் சான்றிதழில் திருநங்கையாக மாறியதிற்கான திருத்தத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளோம், ’’ என்றார்.
இது குறித்து மதுரை மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘போலீஸார் அந்த திருநங்கையை பற்றி என்னிடம் கூறினர். மருத்துவ மாணவர்களிடம் விசாரித்தபோது அவரது பெயரில் ஒரு பையன் மருத்துவக்கல்லூரியில் படித்த ஞாபகம் எனக்கு உள்ளது. நான் இன்னும் அந்த நபரை நேரில் பார்க்கவில்லை. பார்த்தப்பிறகு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தயாராக உள்ளோம், ’’ என்றார்.
மருத்துவம் படித்துவிட்டு யாகசம் பெற்ற சம்பவம் வெளியே தெரியவந்ததால் மிகுந்த மன நெருக்கடியில் இருக்கும் அவர் தனது பெயர், புகைப்படம், தன்னுடைய பெயர் எதுவும் வெளியே தெரிய வேண்டாம் என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.