Last Updated : 23 Nov, 2020 06:48 PM

 

Published : 23 Nov 2020 06:48 PM
Last Updated : 23 Nov 2020 06:48 PM

கரோனாவால் மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு; மனநல மருத்துவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்- உயர் நீதிமன்றம் கருத்து

கரோனா ஊரடங்கால் மனநல பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதனால் இப்போதைக்கு இந்தியாவை பொறுத்தவரை மனநல மருத்துவர்கள் தான் அதிகளவில் தேவைப்படுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை சின்னச்சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மத்திய சிறை அல்லது திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளின் மன நலத்தை பேணும் வகையில் சிறப்பு மனநல சிகிச்சை குழு அமைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளிக்க உத்தரவிட்டது.

மனைவி, மகள், தாய் மற்றும் உறவினர்களை கொலை செய்த குற்றங்களில் கைதாகி சிறையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களைப் பார்க்கவும், பேசவும் யாரும் வராததால் சிறைக்குள் தனக்குத்தானே பேசிக்கொள்வது, அதீதபயம், கற்பனை, மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

சென்னை சிறையில் மட்டுமே சிறைவாசிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கும் மையம் உள்ளது. இங்கும் குறைவான படுக்கை வசதியே உள்ளது. இதனால் குறைந்தளவு கைதிகள் மட்டுமே மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எனவே, திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல மருத்துவர், சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுனர் ஆகியோர் கொண்ட சிறப்பு மன நல சிகிச்சை பிரிவு அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கரோனா ஊரடங்கிற்கு பிறகு மனநல பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்றவையும் ஒருவிதமான மனநல பிரச்சனையின் வெளிப்பாடு தான்.

போலீஸாருக்கோ குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ வாய்ப்பு கிடைப்பதில்லை. கரோனா ஊரடங்கிற்கு பிறகு அனைவரும் மனநல பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனர்.

குடும்பப் பிரச்சனைகளுக்கும் இதுவே காரணம். இப்போதைக்கு இந்தியாவை பொறுத்தவரை மனநல மருத்துவர்கள் தான் அதிகளவில் தேவைப்படுகின்றனர் என்றனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சென்னை சிறையில் ஏற்கெனவே மனநல சிகிச்சை மையம் உள்ள நிலையில், தென் தமிழகத்திலும் சிறைவாசிகளின் தேவைக்காக மனநல சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து, விசாரணையை நவ. 25-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x