Published : 23 Nov 2020 07:08 PM
Last Updated : 23 Nov 2020 07:08 PM

அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களின் கல்வி, விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசு ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவைத் தமிழக அரசே ஏற்பதுபோல், அரசு மருத்துவக் கல்லூரியில் தகுதி அடிப்படையில் இடம்பெற்ற ஏழை மாணவர்களின் கல்வி, விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் இன்று எழுதியுள்ள கடிதம்:

“தமிழக முதல்வருக்கு வணக்கம்.

தமிழகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற தங்களின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வரவேற்கிறோம்.

அதேசமயம், இந்த நடவடிக்கையையொட்டி எழுந்துள்ள உடனடியாகத் தீர்க்க வேண்டிய சில பிரச்சினைகளைத் தங்களின் மேலான கவனத்திற்கும், உடனடித் தீர்விற்கும் முன்வைக்க விரும்புகிறோம்.

அரசுப் பள்ளியில் பயின்று தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள் சிலர் அந்தக் கட்டணத்தைக் கட்டுவதற்கு வாய்ப்பில்லை என்கிற காரணத்தினால் அரசின் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே கலந்தாய்விலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் விளைவாக, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அரிய வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாக அம்மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலுக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர். எனவே, சிறப்பு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களிலோ அல்லது உரிய அனுமதி பெற்று இந்த ஆண்டிற்கு மட்டும் கூடுதல் இடங்களைப் பெற்று இந்த மாணவர்களையும் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்க ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். அதில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பலரும் இருக்கக்கூடும். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு முழுமையான கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்கிற நிலையில் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, இந்த ஆண்டு அரசுக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த இரண்டு முக்கியப் பிரச்சினைகளின் மீதும் தங்களின் நேரடியான உடனடித் தலையீட்டின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும்''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x