

பரோல் காலம் முடிந்து மீண்டும் புழல் சிறைக்குச் செல்லத் தயாராக இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கி இன்று உத்தரவிட்டது. இதற்கிடையே, பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உட்பட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பேரறிவாளன் சர்க்கரை நோய், சிறுநீரகத் தொற்று, மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அக்டோபர் 26-ம் தேதி மூட்டுவலி காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, மீண்டும் நவம்பர் 7-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பேரறிவாளன் 2-வது முறையாக அழைத்துச் செல்லப்பட்டார்.
பேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு மேலும் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 45 நாட்கள் பரோல் காலம் முடிந்து இன்று பேரறிவாளனைச் சிறைக்கு அழைத்துச் செல்லக் காவல் துறையினர் அவரது வீட்டின் அருகே தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, பேரறிவாளனைப் புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல வந்த காவல் துறையினர் திரும்பிச் சென்றனர். வழக்கமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் இன்று கூறும்போது, ''என் மகனுக்கு உடல்நிலை மோசமாக உள்ளது. சர்க்கரை நோய், மூட்டுவலி, சிறுநீரகத் தொற்று எனப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. வயதான எங்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு என் மகன் மட்டுமே. உச்ச நீதிமன்றத்தில் இன்று பேரறிவாளனின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நான் விடுதலையை அதிகமாக எதிர்பார்த்தேன்.
ஆனால், ஒரு வாரம் பரோல் மட்டுமே கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மகன் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எனக்கு உறுதியளித்தார். அவரது வழியில் ஆட்சி செய்யும் முதல்வர் பழனிசாமி என் மகன் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்'' என்றார்.