Last Updated : 23 Nov, 2020 05:28 PM

 

Published : 23 Nov 2020 05:28 PM
Last Updated : 23 Nov 2020 05:28 PM

பாஜகவுடன் அதிமுக கூட்டணி; விவசாயிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்யும் துரோகம்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

தமிழகத்திற்குத் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஜெயலிதாவுக்கும் செய்கிற மிகப்பெரிய துரோகம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெரும்பூர், திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஆகிய கிராமங்களில் இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:

"மத்தியில் ஆளக்கூடிய பாஜக, தொடர்ந்து தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராகப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கியும், தமிழகத்திற்கு எதிராகவும் செயல்பட்டும் வருகிறது. இதனை எதிர்த்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

குறிப்பாக முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் சிவகங்கை, மாவட்டங்கள் பேரழிவைச் சந்திக்கும்.

அதேபோல காவிரியின் குறுக்கே உபரி நீரையும் தடுத்து மேகேதாட்டு அணை கட்டிக் கொள்வதற்கு கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று கடந்த வாரம் ஜல்சக்தித் துறை அமைச்சர் வாய்மொழி ஒப்புதல் தந்திருக்கிறார். இதனால் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பறிபோகும், 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். சுமார் 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாலைவனமாக மாறும்.

காவிரி டெல்டாவின் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வறிவிப்புகள் மட்டுமின்றி மொழி, கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் போராட்டக் களமாக தொடர்ந்து மாறி வருகிறது

இந்த நிலையில் பாஜக- அதிமுக தேர்தல் கூட்டணி தொடரும் என அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி, தமிழ் மக்களுக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகம் ஆகும். எனவே, கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விவசாயிகள், தமிழ் மக்கள் ஒன்றுபட்டுக் கூட்டணிக்கு எதிராகக் களம் இறங்க நேரிடும் என நாங்கள் எச்சரிக்கிறோம்.

திருப்போரூர் சுற்றுவட்டச் சாலை அமைக்க நிலம் கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால், 2002 சட்டப்படி நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்கமாட்டார்கள். புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பு, சலுகைகளுடன் விவசாயிகள் நிலம் அளிக்கத் தயாராக உள்ளனர்.

இதுகுறித்து 2016-17ஆம் ஆண்டுகளில் தொடர் போராட்டங்கள் நடந்து தமிழக அரசினுடைய நில வருவாய் சீர்திருத்தம் மற்றும் கையகப்படுத்துதல் ஆணையர் முன்னிலையில் எழிலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவசாய நிலத்தைக் கையகப்படுத்த உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டாய நிலம் 2002 ஒப்பந்தப்படி கையகப்படுத்தப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்துத் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் பகல் முழுமையிலும் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நெல் கொள்முதலில் தொடரும் குளறுபடிகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்".

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் சென்னை மண்டலத் தலைவர் வீ.கே.வி.துரைசாமி, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் டெல்லி ராம், மாவட்டச் செயலாளர் ராஜசேகர், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் தசரதன், திருக்கழுக்குன்றம் ஒன்றியச் செயலாளர் சண்முகம், நெரும்பூர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x