மருத்துவப் படிப்பில் சேர்ந்த வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ ரூ.50 ஆயிரம் நிதியுதவி 

மருத்துவப் படிப்பில் சேர்ந்த வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி அளித்த சின்னராஜ் எம்எல்ஏ.
மருத்துவப் படிப்பில் சேர்ந்த வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி அளித்த சின்னராஜ் எம்எல்ஏ.
Updated on
1 min read

மருத்துவப் படிப்பில் சேர்ந்த கோவை வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்டது வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இரு மாணவிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு மூலமாக மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

இதன்படி இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி எஸ்.ரம்யா, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி பி.பிஸ்டிஸ் பிரிஸ்கா, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ், மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

அப்போது வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி, வழிகாட்டி ஆசிரியர் அருள் சிவா, மாணவிகளின் பெற்றோர் உடன் இருந்தனர்.

இது குறித்து மாணவிகள் எஸ்.ரம்யா, பி.பிஸ்டிஸ் பிரிஸ்கா ஆகியோர் கூறும்போது, 'நாங்கள் மிகவும் பின் தங்கிய பகுதியைச் சேர்ந்தவர்கள். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கான வசதி இல்லை. எங்கள் பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நாங்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு இல்லாமல் போயிருந்தால் எங்களால் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியாது.

எங்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பை உருவாக்கித் தந்ததற்கும், எங்களுடைய கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொண்டதற்கும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது எங்களது உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு நிதியுதவி அளித்த மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in