

பாஜக ஆட்சியில் இந்திய மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன் பிடிப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புயல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது:
''திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஏதேதோ கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை அவருக்குப் பொருந்துகிறதா என ஒருமுறை எண்ணிப் பார்க்கவேண்டும். எதிர்க் கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது என்கிறார். அந்த உவமை தனக்குப் பொருந்துகிறதா என அவர் பார்க்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமிக்ஷா குடும்ப அரசியல் செய்பவரையும், பரம்பரை அரசியலையும் ஒழித்துக் கட்டுவோம் என்றார். அதிமுகவிலும், பாஜவிலும் யார் குடும்ப அரசியல் நடத்துகிறார்கள்?
மோதிலால் நேரு தொடங்கி, தற்போது ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா காந்தி- இதுதான் வாரிசு அரசியல். அவர்களின் காலைப் பிடித்து அரசியல் செய்து கொண்டுள்ள திமுக உண்மையில் திமுக அல்ல, மு.க கட்சி, கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, துணைவியார் மகள் கனிமொழி, முரசொலி மாறன், மகன் தயாநிதிமாறன் என்பதுதான் குடும்ப அரசியல். வெட்கமில்லாமல் யாரைப் பார்த்துக் குடும்ப அரசியல் என்கிறார்.
உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால் எல்லா மிருகங்களும் தெரியும். கருணாநிதிக்கு எல்லா ஆற்றலும் உண்டு. அவரின் வாரிசுகளுக்கு வாரிசு என்பதை தவிர வேறு என்ன தகுதி உள்ளது. உலகில் மிகப்பெரிய ஊழல் என்ற 2ஜி ஊழலைச் செய்தது திமுகதான். 2ஜி வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். பாஜக நாட்டுக்கு என்ன கொண்டுவந்தது என்கிறார். மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்தது. காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடமுடியாத அரசு திமுக. ஆனால் அதிமுகதான் காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
பாஜகவின் இந்த 7 ஆண்டு கால ஆட்சியில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கிறார்கள். எங்காவது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதா? ஆனால் காங்கிரஸில் அங்கம் வகித்த திமுக ஆட்சியில் அப்படியா? அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் இவருக்கு என்ன வந்தது? இவருக்கு ஏன் வயிறு எரிகிறது?
2011-ம் ஆண்டு அறிவாலயத்தில் இவரின் தாயாரை வைத்து கீழ்த் தளத்தில் சிபிஐ ரெய்டு நடந்தபோது, மேல்தளத்தில் காங்கிரஸூடன் கூட்டணி குறித்துப் பேசியவர்கள் இவர்கள். அண்ணா, கருணாநிதியுடன் அரசியல் செய்தவர்கள் எல்லாம், தற்போது உதயநிதியின் காலைப் பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்''.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.