

18,19-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்ததால் சேர முடியாத மாணவிகள் இருவர் அரசின் தாமதமான அறிவிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார் பண்ருட்டி வேல்முருகன்.
சிதம்பரத்தைச் சேர்ந்த தர்ஷினி, இலக்கியா ஆகிய இரு அரசுப் பள்ளி மாணவிகளும் இம்மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் குடும்பத்தின் வறுமை காரணமாகப் பணம் கட்டமுடியாமல் திரும்பிச் சென்றனர்.
இதனால் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசால் நவ.20 அன்று வெளியிடப்பட்டுள்ள 7.5% அரசு ஒதுக்கீடு மாணவர் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற தாமதமான அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல மாணவ, மாணவிகள் இந்தத் தாமதமான அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாணவிகள் இருவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைச் சந்தித்தனர். வேல்முருகன் அவர்களுடன் சென்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிட்டார்.
பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
“மாணவிகள் இருவரும் 18,19 ஆகிய தேதிகளில் மருத்துவக் கலந்தாய்வுக்குச் சென்றனர். உங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது, தனியார் மருத்துவக் கல்லூரியில் இணைகிறீர்களா என்று கேட்டபோது பணம் இல்லை என்கிற காரணத்தால் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று வந்துவிட்டனர். தற்போது அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணச் செலவை திமுக ஏற்கும் என 20-ம் தேதி காலை ஸ்டாலின் அறிவித்த பின்னர், அவசர அவசரமாக முதல்வர் மதியத்துக்கு மேல் அறிவித்துள்ளார்.
18, 19-ம் தேதிக்கு கவுன்சிலிங் சென்று தனியார் கல்லூரிகளில் பணமில்லாததால் சேராமல் திரும்பிய மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கனவு இதனால் தகர்ந்துள்ளது. ஆதலால், நாங்கள் தர்ஷினி, இலக்கியா மாணவிகள், அவர்களின் பெற்றோருடன் சென்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தோம். 18-ம் தேதிக்கு முன்னரே அறிவிப்பு வெளியிடாததால் இருவரின் மருத்துவக் கனவு கலைந்துள்ளது. ஆகவே, திமுக தலைவர் இதில் தலையிட்டு இந்த ஆண்டே மருத்துவம் பயில வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் எனக் கடிதம் அளித்துள்ளனர்.
இதை ஏற்று உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து முதல்வருக்கு தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி, ஒரு குழுவை அனுப்பி முதல்வரைச் சந்தித்து இதுபோன்று பாதிக்கப்படும் மாணவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் இதில் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் பல விஷயங்களை, தவறுகளைச் சுட்டிக்காட்டிய பின்னர் முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோன்று இதிலும் முதல்வர் தவறை உணர்ந்து உரிய உத்தரவு இடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவதற்கு மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையையும் கேட்டுள்ளோம்.
இதில் கொடுமையான விஷயம், இதுபோன்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சென்னை நோக்கி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட தர்ஷினி, இலக்கியா இருவரும் கோட்டைக்குச் சென்று தங்கள் நிலையை விளக்க முதல்வரைச் சந்திக்க, சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதேபோன்று திருப்பூரில் இஸ்லாமிய மாணவி ஒருவர் சென்னை வருவதற்குக்கூட பேருந்துக் கட்டணம் இல்லாமல் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
தர்ஷினி, இலக்கியா இருவரும் என்னைச் சந்தித்தார்கள். நான் நிலையை விளக்கி ஸ்டாலினிடம் அனுமதி கேட்டேன். உடனடியாக வரும்படி அழைத்தார். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர், 6 மாதத்தில் முதல்வராக வர உள்ளவர் எங்களைச் சந்திக்க நேரம் தருகிறார். ஆனால், ஆளுகின்ற முதல்வர் அனுமதிக்க மறுக்கிறார். மாணவிகள் முதல்வரைச் சந்திக்கச் சென்றபோது முதல்வரின் செயலாளர், அதிகாரிகள் யாரும் மனுவை வாங்க மறுத்துவிட்டனர்.
18-ம் தேதியே கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் இவர்கள் ஏன் பணம் கட்ட முடியவில்லை என திரும்பிச் செல்லப் போகிறார்கள். கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற நிலை உள்ளது. உடனடியாக இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்தார்.