Published : 23 Nov 2020 02:04 PM
Last Updated : 23 Nov 2020 02:04 PM

இந்துத்துவ சிந்தனையாளர்களின் பட்டியலைச் சேகரிக்கும் சங் பரிவார் அமைப்புகள்: தேர்தல் நெருங்கும் நிலையில் தீவிரம்

அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழகம் முழுவதும் இருக்கும் இந்துத்துவ சிந்தனையாளர்களின் பட்டியலைச் சேகரிக்கும் முனைப்பில் சங் பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தப் பட்டியல் சேகரிப்பும், ஒவ்வொரு இல்லத்திலும் அவர்கள் நிகழ்த்தும் பத்து நிமிடப் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திருச்சியில் இருக்கும் தெய்வீகத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ‘தேசியம் காக்க... தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள்’ என்னும் 15 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகம் ஒன்றை சங் பரிவார் அமைப்புகள் தமிழகம் முழுக்க வீடு, வீடாகக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. கூடவே, அவர்கள் செல்லும் வீடுகளில் பத்து நிமிடங்கள் பேசுவதோடு, தமிழகம் முழுவதும் இருக்கும் இந்துத்துவ சிந்தனையாளர்களின் பட்டியலையும் சேகரிக்கின்றனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்துக்களை அவர்கள் இல்லத்திலேயே சென்று குழுவாகச் சந்தித்து, இந்து மதத்தின் கருத்துகளையும் எடுத்துக் கூறுகின்றனர். இதில் சேகரிக்கப்படும் இந்துத்துவச் சிந்தனையாளர்களின் தொடர்பு எண்கள் தமிழகத் தலைமைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பணியில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷித் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலோடு செய்து வருகின்றன.

இதுகுறித்துக் கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை பகுதியில் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்த பாஜகவின் மாவட்ட வழக்கறிஞரணிச் செயலாளர் ஆறுமுகம் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்து நிமிடங்கள் பேசுகிறோம். மாலை நேரத்தில் சீரியல்களுக்கு அடிமையாகாமல் டிவியை அணைத்துவிட்டு 5 நிமிடம் விளக்கு ஏற்ற ஒதுக்குங்கள். பக்தியோடு கடவுளை வணங்குங்கள். வீட்டு பூஜையறைக்கு தினமும் செல்லுங்கள்.

வழக்கறிஞர் ஆறுமுகம்

வீட்டுப்பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குத் தினமும் செல்லுங்கள். குழந்தைகளை ஆன்மிக உணர்வுடன் வளருங்கள். வருடத்துக்கு ஒரு முறையேனும் குல தெய்வ வழிபாடு செய்யக் குடும்பத்துடன் செல்லுங்கள் என்பன உள்பட நிறையப் பேசுகிறோம். மக்கள் திராவிடக் கட்சிகளினால் நாசமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ஆன்மிகத்தின் வழியே மீட்டெடுக்கும் பெரு முயற்சி இது.

இந்துக்களின் வீடுகளுக்குத்தான் செல்கிறோம். நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்துத்துவ சிந்தனையாளராக இருங்கள் என அவர்கள் மாற்றுக்கட்சியினராக இருந்தாலும் பேசுகிறோம். தமிழக அளவில் இதற்காகத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும், வீடுகளில் சென்று பேசவும் ஒவ்வொரு 50 வீடுகளுக்கும் மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அதில், வீடுகளுக்குச் செல்லும்போது, இந்துத்துவ சிந்தனையோடு பேசுபவர்களின் பட்டியலையும் சேகரிக்கிறோம். இந்தப் பணியைச் செய்வதற்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 50 வீடுகளுக்கு சென்றால், 20 வீடுகளிலாவது தீவிர இந்துத்துவ சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் சகிதம் சேகரித்துக் கொள்கிறோம். குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பணி நடக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வெவ்வேறு தேதிகளில் இந்தப் பணிகள் நடக்கும். இது தமிழகம் முழுவதும் இருக்கும் இந்து சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும்'' என்றார்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சங் பரிவார அமைப்புகள் இந்துத்துவ சிந்தனையாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x