மருத்துவக் கல்வி: உள் ஒதுக்கீட்டை 10% உயர்த்தி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்குக: கி.வீரமணி வலியுறுத்தல்

மருத்துவக் கல்வி: உள் ஒதுக்கீட்டை 10% உயர்த்தி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்குக: கி.வீரமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை 10 விழுக்காடாக உயர்த்தி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அந்தப் பலன் சென்றடைய ஆவன செய்யுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“ ‘நீட்’ தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் பயின்று வெற்றி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கொடுமை ஏற்பட்டது. காரணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துதான் மருத்துவப் படிப்பை முடிக்க முடியும்.

அங்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணங்களைவிட பன்மடங்கு அதிகம். தாங்கள் வசதியற்ற, ஏழை, கிராமங்களில் வசிக்கக்கூடிய மற்றும் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழே உள்ளவர்கள் என்பதால், தாங்கள் விலகுவதாக, மனம் உடைந்து எழுதிக் கொடுத்தனர்.

இப்போது - காலந்தாழ்த்தியாவது, தமிழக அரசே அவர்களது கல்விக் கட்டணத்தை ஏற்கும் என்று முதல்வர் அறிவித்திருப்பது நன்றிக்குரியது என்பதால், அவர்கள் எழுதிக் கொடுத்ததை மாற்றி, அவர்களையும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்கள் நெஞ்சில் பால் வார்க்க வேண்டியது மனிதாபிமான அடிப்படையில் மிகவும் முக்கியமாகும்.

அதோடு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, நீதிபதியின் பரிந்துரைப்படி 10 சதவிகித உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்திடுவது அவசிய, அவசரமாகும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் இதில் பயன்பெறுவது முக்கியம்.

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி (State aided) என்பது, நிர்வாகத்தைப் பொறுத்த மாற்றமே தவிர, பாடத் திட்டத்திலோ, தேர்விலோ எந்த மாறுதலும் உள்ளவை அல்ல. அந்த மாணவர்கள், பெற்றோருக்கும் சமூக நீதி கிடைக்கச் செய்வதுதான் சுய முரண்பாடற்ற சமூக நீதி செயலாக்கம். இது முக்கியம். தமிழக அரசு மறுபரிசீலனை செய்க".

இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in