

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 96.9 ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர், அரசு மருத்துவக் கல்லூரியில் தொற்றாளர்களுக்கான படுக்கைகள் பெருமளவு காலியாக உள்ளதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்கு பதிலாக மருத்துவமனைகளில் சிகிச்சை தர அரசு திட்டமிட்டுள்ளது.
புதுவையில் நேற்று கரோனா தொற்றுப் பரிசோதனையில் புதிதாக 27 பேருக்குத் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 57 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் இதுபற்றிச் சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று வெளியிட்ட தகவலில், "புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 36 ஆயிரத்து 718 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 217 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 35 ஆயிரத்து 582 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நலமடைந்தோர் சதவீதம் 96.9 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஜிப்மரில் 89 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 82 பேரும், காரைக்கால் மருத்துவமனையில் 14 பேரும், ஏனாம் மருத்துவமனையில் 6 பேரும், மாஹே மருத்துவமனையில் 26 பேரும் சிகிச்சையில் உள்ளனர். அதிக அளவு படுக்கைகள் காலியாக உள்ளன.
புதுச்சேரி முழுக்க 4 பிராந்தியங்களிலும் 310 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்று யாரும் தொற்றால் இறக்கவில்லை. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 609 ஆக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே கரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரையும், மருத்துவமனைகளில் வைத்துக் கண்காணிக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.